திருவள்ளூர் அருகே மாமியாரை ஏமாற்றி ரூ.2 கோடி மோசடி மருமகன் கைது

திருவள்ளூர் அருகே மாமியாரை ஏமாற்றி ரூ.2 கோடியே 47 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மருமகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-08-22 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 55). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 19-12-2014 அன்று ஜோதியிடம் அவரது மருமகனான திருவள்ளூரை அடுத்த வெள்ளியூரை சேர்ந்த அன்பு (47) என்பவர் தனது மாமனாரின் ஓய்வூதிய பணத்தை வாங்கி வரலாம் என கூறி அவரை திருவள்ளூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

இங்கு ஏன் தன்னை அழைத்து வந்தீர்கள் என ஜோதி கேட்டபோது தனக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளதால் உங்கள் பெயரில் உள்ள சொத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.7 லட்சம் கடன் வாங்க போவதாகவும், அந்த பணத்தை மறுபடியும் தான் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார். இதை நம்பி அவர் கொடுத்த பத்திரத்தில் கைநாட்டு வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக கேட்டபோது மருமகனான அன்பு எந்த பதிலும் சொல்லாமல் ஏமாற்றி காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் ஜோதியின் வீட்டு முன்பு வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டினார்கள். அதில் ஜோதி பெயரில் ரூ.2 கோடியே 47 லட்சம் கடன் வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த பணத்தை 2 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும். இல்லை எனில் சொத்து ஏலத்தில் விடப்படும் என வங்கி ஊழியர்கள் கூறிவிட்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விசாரித்தபோது மருமகன் அன்பு, மகள் தனலட்சுமி ஆகியோர் சொத்தை அடமானம் வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. அவர்களுக்கு உடந்தையாக அன்புவின் நண்பரான சென்னை கொளத்தூரை சேர்ந்த மோகன்குமார், அவரது மனைவி சவிதா ஆகியோர் இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோதி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானவேல், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், விஸ்வநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அன்புவை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அன்புவின் மனைவி தனலட்சுமி, அவரது நண்பர் மோகன்குமார், மோகன்குமாரின் மனைவி சவிதா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்