பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி குமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-08-22 23:00 GMT
நாகர்கோவில்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வராததால், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் 22–ந்தேதி (நேற்று) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை, வளர்ச்சிப்பிரிவு மற்றும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுபோல பல்வேறு சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பகவதியப்பபிள்ளை, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், மூட்டா அமைப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திரளாக கலந்துகொண்டதால் கலெக்டர் அலுவலக பகுதி நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

வேலை நிறுத்தம் குறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தியாகராஜன் கூறும்போது, ‘எங்களது கோரிக்கைகள் பலமுறை அரசிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. குமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 18 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்று வேலைக்கு செல்லவில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்