கார் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி: விபத்து நடந்த இடத்தில் தடுப்பு கட்டை அமைக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி என்ஜினீயரிங் மாணவர் இறந்தார். விபத்து நடந்த இடத்தில் தடுப்பு கட்டை, உயர்மின் கோபுர விளக்கு அமைக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-22 22:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கணையார் கிராமத்தை சேர்ந்தவர் பரதன்(வயது 21). அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வெள்ளையூர் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் பரதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அந்த வழியாக வந்த பஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கணையார், வெள்ளையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வராததால் தான், பரதன் உயிரிழந்துள்ளார் என கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் இந்த விபத்து பற்றி அறிந்த அரசூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவ–மாணவிகள் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் திருச்சி–சேலம் பிரிவு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விபத்து நடந்த இடத்தில் தடுப்பு கட்டை, உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி தடுப்பு கட்டை மற்றும் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்று கல்லூரி மாணவ–மாணவிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்