பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-22 23:00 GMT
புதுக்கோட்டை,

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்குபின் புதிய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள-ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18,300 கோடியை மத்திய அரசின் நிதி அமைச்சக்கத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை.

இதைக்கண்டித்து ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பின் சார்பில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டையில் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிர்வாகி திராவிடச் செல்வம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் நாகராஜன், கனகமுத்து, கணேசன் மற்றும் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரையிலான அனைத்துக் கல்வி நிலையங்களின் பணிகள் முற்றிலுமாக முடங்கியது.

ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ஜபருல்லா தலைமை தாங்கினார். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் அறிவழகன், சத்துணவு பணியாளர் சங்கம்் மற்றும் பல்வேறு சங்கத்தினர்கள், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலை தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம், ஊரக வளர்ச்சி துறை சங்கம் உள்ளிட்ட 16 அரசு துறைகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஜக்டோ-ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தால் பொன்னமராவதி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் எந்தப்பணியும் நடைபெறவில்லை.

கீரனூர் காந்தி சிலை முன்பு ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் தவமணி மற்றும் அரசு ஊழியர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குன்றாண்டார்கோவில் யூனியனில் 100-க்கும் மேற்பட்ட ஆரம்பபள்ளி, தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. இந்த போராட்டத்தில் கீரனூர் பேரூராட்சி தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்