குளங்களில் தோண்டப்படும் பள்ளங்களால் ஆபத்து சீராக மண் எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கீரமங்கலம் பகுதியில் உள்ள குளங்களில் தோண்டப்படும் பள்ளங்களால் ஆபத்து ஏற்படும் என்றும் சீராக வண்டல் மண்ணை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-09-05 22:45 GMT
கீரமங்கலம்,

தமிழக அரசு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குளங்களை தூர்வாரும் பொருட்டு அதிலுள்ள வண்டல் மண்களை எடுத்து செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி குளங்களில் மண் எடுக்க வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை, பேரூராட்சி போன்ற துறை அதிகாரிகள் அது குறித்து விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.

இதில் கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குளத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டு அந்த குளம் முழுமையாகவும் சீராகவும், மண் எடுக்கப்பட்ட பிறகு அடுத்த குளத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பல கிராமங்களில் கிராம நிர்வாகமே குளங்களில் சீராக மண் எடுத்து தூர்வாரி குளத்தில் தண்ணீர் தேங்கும் நிலையில் சீரமைத்து வருகிறது.

ஆனால் கீரமங்கலம் பகுதியில் பல குளங்களுக்கு ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனுமதி பெற்ற ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான இடத்தில் ஆங்காங்கே பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி செல்வதால் குளம் சீராக இல்லாமல் பல இடங்களில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் நிரம்பிய காலங்களில் குழந்தைகள் குளிக்கச் சென்றால் பள்ளங்களுக்குள் விழும் ஆபத்தான நிலைஏற்பட்டு வருகிறது.

மேலும் கீரமங்கலம் உள்பட பல குளங்களில் தண்ணீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அதனால் குளங்களுக்கு தண்ணீர் வரத்தும் தடைபடுகிறது. மேலும் குளங்கள் நிரம்பினால் தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த குமிழிகளில் மண் நிரப்பி உள்ளது. அவற்றையும் சரி செய்ய வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அனைத்து குளங்களையும் ஒரே மாதிரியாகதூர்வார அனுமதி வழங்குவதுடன், கண்காணித்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்