நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் சாலைமறியல்; போலீசாருடன் தள்ளுமுள்ளு 100 பேர் கைது

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-09-13 00:15 GMT
சென்னை,

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மாணவர் சங்கத்தினர், புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை வழியாக சென்று கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு-கைது

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் மாணவர்கள் கைகளை கோர்த்தபடி சாலையில் அமர்ந்தனர். மீண்டும் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்ற முயன்றனர். இதில் போலீசாருக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினரை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

அடக்கிவிட முடியாது

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதும் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வாகும். மாறாக போராட்டங்களை ஒடுக்குவதாலோ, போராடுபவர்களை அச்சுறுத்துவதாலோ தமிழக மக்களின்-மாணவர்கள், இளைஞர்களின் கொந்தளிப்பை அடக்கிவிட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

சாலைமறியல்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தலைமையில் நடந்த போராட்டத்தில் மருத்துவ மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவொற்றியூர் பூந்தோட்டபள்ளியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வண்ணாரப்பேட்டை பாரதி மகளிர் கல்லூரி மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளின் அடையாள அட்டைகளை பறித்து கொண்டதாக தெரிகிறது. இதற்கு மாணவிகள் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்