போலீசாரை கண்டித்து மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம்

மாணவரை போலீசார் தாக்கியதை கண்டித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-19 00:15 GMT

ஆண்டிப்பட்டி,

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3–ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்களில் தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தேனி அருகே மதுரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், மோட்டார் சைக்கிள்களில் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவர்களை நிறுத்தி ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்ததாக தெரிகிறது.

அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது பணியில் இருந்த போலீசார், மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும் நிரஞ்சன் என்ற மாணவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தனர்.

இருந்தபோதிலும் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி நேற்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குலாம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவரை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

அதன்பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே போலீஸ் பரிந்துரையின் பேரில் உடற்கூறு தகுதி சான்றிதழ் கேட்டு வந்தவர்களுக்கு மருத்துவர்கள் சான்றிதழ்கள் தர மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரே உடற்கூறு தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்