வேலை வாங்கி தருவதாக 2 பேரிடம் ரூ.8¼ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த பெண் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-09-20 23:49 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலை புதூர்நாடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் நாச்சியம்மாள் (57). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.4 லட்சம் கொடுத்தால் தாலுகா அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கண்ணனிடம் நாச்சியம்மாள் கூறினார். அதனை நம்பி கண்ணனும் ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார்.

வெகுநாட்கள் ஆகியும் நாச்சியம்மாள் வேலை வாங்கி கொடுக்காததால், கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கண்ணன் கேட்க ஆரம்பித்தார். ஆனால் நாச்சியம்மாள் பணத்தை திருப்பி தராமல் கண்ணனை ஏமாற்றி வந்தார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவரிடம், நில அளவை அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4¼ லட்சத்தை நாச்சியம்மாள் வாங்கியுள்ளார். அவருக்கும் வேலை வாங்கி தராததோடு பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.

இது குறித்து கண்ணன், பிரகாஷ் ஆகிய 2 பேரும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனி புகார் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான நாச்சியம்மாளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்