எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ரூ.650 கோடிக்கு வரி ஏய்ப்பு

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நேற்று முடிவடைந்தது.

Update: 2017-09-24 22:31 GMT

பெங்களூரு,

எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் வீட்டில் 4 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நேற்று முடிவடைந்தது. சோதனை முடிவில் சித்தார்த் ரூ.650 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்–மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவர், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். இவருடைய மருமகன் சித்தார்த். தொழில் அதிபரான இவர் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சித்தார்த்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், காபி டே, நட்சத்திர ஓட்டல்கள், காபி தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களில் கடந்த 21–ந் தேதி வருமான வரி சோதனை தொடங்கியது. பெங்களூரு, சிக்கமகளூரு, சென்னை, மும்பை உள்பட 24 இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்றது. சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர்.

நேற்று 4–வது நாளாகவும் சித்தார்த்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. நேற்று மாலையுடன் இந்த சோதனை முடிவுக்கு வந்தது. சோதனையின் முடிவில் சித்தார்த் ரூ.650 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், விதிகளை மீறி அவர் பணம் சம்பாதித்து கணக்கில் காட்டாமல் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தொடர்ந்து பரிசீலனை செய்யும்போது இந்த வரி ஏய்ப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்