விழுப்புரம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மண்டல இயக்குனர் திடீர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மண்டல இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2017-10-09 22:45 GMT

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு சுகாதார பணியை மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

விழுப்புரம் நகராட்சி பகுதியிலும் டெங்குநோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இங்குள்ள 42 வார்டுகளில் கொசு மருந்து அடிப்பது, தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றுதல், தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் இளங்கோவன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு புதுச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுவதை பார்வையிட்ட அவர் நகராட்சி பகுதியில் பன்முகப்படுத்தப்பட்ட உரக்கிடங்கு அமைப்பதற்கான இடங்களையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் செந்திவேல், நகர்நல அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்