கல்வி உதவித்தொகையை குறைத்து வழங்குவதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கல்லூரி மாணவ–மாணவிகள்

என்ஜினீயரிங் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஏராளமான மாணவ–மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2017-10-09 22:45 GMT

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை, நடைபாதை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஹரிகரன், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தின்போது என்ஜினீயரிங் படிக்கும் ஆதிதிராவிட மாணவ–மாணவிகள் தங்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

தமிழகத்தில் உள்ள சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் மருத்துவப்படிப்புகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழு கடந்த 22.6.17 அன்று கட்டணங்களை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி பி.இ. படிக்கும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கட்டணமாக ரூ.85 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்த கட்டண குழு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை முழுவதுமாக ஆதிதிராவிட மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவிதொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து இருந்தார். இதனால் பி.இ. முதலாம் ஆண்டு படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.85 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஆனால் தற்போது தமிழக அரசு கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. இதனால் மீதம் உள்ள ரூ.35 ஆயிரம் கட்டணத்தை சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட மாணவர்களே செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஏழை குடும்பங்களை சேர்ந்த எங்களால் இவ்வளவு தொகை செலுத்த முடியாது. எனவே எங்களது கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கல்வி உதவித்தொகையை குறைத்து வழங்காமல், முழுமையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அருந்ததியர் முன்னேற்ற கழகநிர்வாகி மணியரசு தலைமையில் ஏராளமான பெண்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பம்பட்டி கிராமம், கள்ளப்பாளையம், இடையர்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ஏராளமான அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வரும் இவர்களுக்கு பஞ்சமி நிலங்களை மீட்டு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அல்லது புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், கோவை சிங்காநல்லூரில் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4½ ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கட்டிடப்பணி இன்னும் முடிக்கப்பட வில்லை. இதனை குறுகிய காலத்துக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட உள்ளது.

மேலும் செய்திகள்