கோலார் மாவட்ட கலெக்டராக மனநிறைவோடு பணியாற்றினேன் திரிலோக் சந்திரா பேட்டி

கோலார் மாவட்டம் எனது மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது என்றும், நான் கலெக்டராக பணியாற்றிய 3 ஆண்டுகளும் மனநிறைவோடு பணியாற்றினேன் என்றும் திரிலோக் சந்திரா கூறினார்.

Update: 2017-10-09 22:21 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்ட கலெக்டராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் திரிலோக் சந்திரா. இவரை மாநில அரசு கர்நாடக அரசின் பொதுபத்திர பதிவு கமிஷனராக பணிமாற்றம் செய்து உள்ளது. இதனால் கோலார் மாவட்ட புதிய கலெக்டராக சிக்கமகளூரு மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றிய சத்தியவதி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் திரிலோக் சந்திரா தனது பொறுப்புகளை மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி காவேரியிடம் ஒப்படைத்தார். அதன்பின் அவர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மனநிறைவோடு பணியாற்றினேன்

கோலார் மாவட்ட கலெக்டராக நான் பணியாற்றிய 3 ஆண்டுகளும் மனநிறைவோடு பணியாற்றினேன். நான் கலெக்டராக பொறுப்பேற்ற பின்பு மாவட்டத்தில் ரூ.25 கோடி செலவில் 40 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டது. தற்போது பெய்து வரும் கனமழையால் அந்த தடுப்பணைகளில் நீர்நிரம்பி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. கோலாரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை குறைவான அளவே பிரசவங்கள் நடந்தன.

நான் கலெக்டராக பொறுப்பேற்ற பின்னர் அந்த ஆஸ்பத்திரி நவீனப்படுத்தப்பட்டது. தற்போது ஆஸ்பத்திரியில் மாதத்திற்கு 400 முதல் 450 வரை பிரசவங்கள் நடக்கின்றன.

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே அதிக கழிவறைகள் கட்டிய மாவட்டத்தில் கோலார் மாவட்டத்திற்கு முதல் இடம் கிடைத்தது எனக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பச்சை தீவன வளர்ப்பு முறையில் கோலாரை முதல் மாவட்டமாக நான் திகழ வைத்து உள்ளேன்.

நீங்காத இடம் பிடித்து உள்ளது

கே.சி.வேலி குடிநீர் திட்டத்திற்கு நான் கலெக்டராக பொறுப்பேற்ற பின்னர் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளது. மேலும் கோலார் தங்கவயலுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பேத்தமங்களா ஏரி 2 ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு கிடந்தது. ஏரியில் ராஜகால்வாய் பணிகளை பி.இ.எம்.எல். தொழிற்சாலையின் உதவியுடன் நான் செய்தேன். தற்போது கனமழைக்கு பேத்தமங்களா ஏரியும் நிரம்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

கோலார் மாவட்டத்தில் நான் பணியாற்றிய 3 ஆண்டுகளும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மனதில் கோலார் மாவட்டம் நீங்காத இடம் பிடித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்