மனித கழிவுகளை அள்ளுவதற்கு மனிதர்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை

மனித கழிவுகளை அள்ளுவதற்கு மனிதர்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வுக் கூட்டத்தில், தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி தெரிவித்தார்.

Update: 2017-10-11 00:02 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் நிரந்தர, தற்காலிக துப்புரவு பணியார்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு இந்திய அரசின் தேசிய ஆணைய உறுப்பினர் (துப்புரவு பணியாளர்கள்) ஜெகதீஷ் கிர்மானி தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் திண்டுக் கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக் கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி கூறினார். மேலும் கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

மனித கழிவுகளை அகற்ற மனிதனை ஈடுபடுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், தனியார் அமைப்புகளில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும். துப்புரவு பணியாளர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவை பற்றி தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

துப்புரவு பணியாளர்கள் நோயுற்றால், டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ நிதிஉதவி வழங்கப்படுகிறது. இதற்கான ஆவணங்களில் கலெக்டர் அல்லது எம்.பி.-யிடம் கையெழுத்து பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் சபாய் கரம்ஷாரி நிதி நிறுவனம் மூலம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மத்திய அரசு, துப்புரவு பணியாளர்களுக்கு வருகிற 2020-ம் ஆண்டுக்குள் வீடு, மருத்துவம், அவர்களை சேர்ந்தவர்களுக்கு தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் துப்புரவு பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் செயல்படுகிறது. எனவே, குடிசை மாற்று வாரியம் மற்றும் பிற திட்டங்கள் மூலம் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்கி, மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுக் கொடுக்க வேண்டும். துப்புரவு பணி செய்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நல அலுவலர் மல்லிகா உள்பட அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மாணிக்கு, போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்