விருதுநகர் மாவட்ட அளவில் தேர்வு: தூய்மை பள்ளிகளுக்கு விருது கலெக்டர் வழங்கினார்

மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தூய்மை பள்ளிக்கான விருதுகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

Update: 2017-10-11 10:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டஅளவில் பள்ளிகளில் தண்ணீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்து சிறப்பாக செயல்பட்ட 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளிக்கான விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான தண்ணீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்து நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

மேலும் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆதிதிராவிட நலத்துறை சார்பில், கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காரியாபட்டி தாலுகா கம்பிக்குடி கிராமத்தை சேர்ந்த மாணவி ஷீலா மற்றும் விருதுநகர் தாலுகா பெரியவள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த மாணவி நந்தனா ஆகியோருக்கு அம்பேத்கர் பவுண்டேசன் மூலம் தலா ரூ.40 ஆயிரத்திற்்கான காசோலைகளையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், தனித்துணை ஆட்சியர்கள் முருகேசன், உஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம், முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயாம்பிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்