போடியில் பரிதாபம்: டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி பலி

போடி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவர், போடி சுப்பிரமணியர் தெருவில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

Update: 2017-10-11 07:00 GMT
போடி,

அவருடைய மனைவி ராஜேஸ்வரி (26). இவர்களுக்கு ராஜஸ்ரீ (4) என்ற மகள் இருக்கிறாள். இந்தநிலையில் ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார்.

8 மாத கர்ப்பிணியான அவருக்கு, திடீரென காய்ச்சல் ஏற்பட்து. இதைத்தொடர்ந்து அவர், போடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, டெங்கு காய்ச்சலால் ராஜேஸ்வரி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலால், 8 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்று அவர்களுடைய உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர்.

எனவே போடி பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்