மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதை தடுக்கவில்லை கவர்னர் கிரண்பெடி விளக்கம்

தகுதியுடைய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதை தடுக்கவில்லை என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-11 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில அனைத்து தலித் அமைப்புகளின் போராட்டக்குழு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக உண்ணாவிரதம் நடந்தது. ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் 131 ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் விளக்குகள் அமைத்தது தொடர்பாக அமைச்சர் கந்தசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் பரிந்துரைத்ததை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.

இந்தநிலையில் கவர்னர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

யாரும் தடுக்கவில்லை

பேட்கோ மூலம் கடந்த நிதியாண்டில் 401 மாணவர்களுக்கு ரூ.7 கோடியே 70 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் 17–ந்தேதி வரை 37 பேருக்கு கல்விக்கடனாக ரூ.1 கோடியே 10 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்? நிதி வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அந்த நிதி ஹைமாஸ் விளக்குகள் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிதி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே உண்ணாவிரதம் இருப்பவர்கள் முதலில் சரியான தகவல்களை தெரிந்துகொள்ளவேண்டும். தகுதியுடைய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதை யாரும் தடுக்கவில்லை.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்