வேப்பம்பட்டு அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து

வேப்பம்பட்டு அருகே மின்சார ரெயிலில் சென்ற 2 கல்லூரி மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2017-10-11 22:30 GMT

திருவள்ளூர்,

வேப்பம்பட்டு, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஆனந்தபாபு (வயது 16). அம்பத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் மாலை அவர் தன்னுடன் படிக்கும் தண்ணீர்குளத்தை சேர்ந்த விஜயகுமாருடன் (17) அம்பத்தூரில் இருந்து மின்சார ரெயிலில் வந்தார்.

வேப்பம்பட்டு அருகே ரெயில் வந்து கொண்டு இருந்த போது அருகே இருந்த 3 வாலிபர்கள் திடீரென ஆனந்தபாபு, விஜயகுமாருடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கினர்.

இதில் ஆனந்தபாபுவும், விஜயகுமாரும் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அதற்குள் மின்சார ரெயில் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் வந்தடைந்தது. உடனே 3 வாலிபர்களும் கத்தியுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

பலத்த காயம் அடைந்த மாணவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற அரசு பஸ் வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே நின்றது. அதில் இருந்து கல்லூரி மாணவர்கள் சிலர் இறங்கினர்.

அப்போது அங்கு உருட்டுக்கட்டையுடன் தயாராக நின்ற கும்பல் மாணவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

சிறிது நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. காயம் அடைந்த மாணவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்