என் மீதான அரசு நில முறைகேடு புகார் அடிப்படை ஆதாரமற்றது ஆவணங்களை வெளியிட்டு சித்தராமையா பேட்டி

என் மீதான அரசு நிலமுறைகேடு புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று ஆவணங்களை வெளியிட்டு சித்தராமையா கூறினார்.

Update: 2017-10-11 23:15 GMT
பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்த புட்டசாமி என் மீது அரசு நில முறைகேடு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது. முதல்-மந்திரியின் புகழை கெடுக்க வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜனதா திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளது. பூபசந்திராவில் நிலம் விடுவிப்பு குறித்து நான் உத்தரவுகளை பிறப்பித்ததாக அவர் கூறி இருக்கிறார். நான் அவ்வாறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு ஆதாரம் கிடையாது.

அரசு நிலத்தை அரசாணையில் இருந்து விடுவிப்பது என்பது சட்டப்படி நிகழ்கிறது. வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு உள்ளது. இந்த குழு தான் அரசு நிலத்தை விடுவிப்பது குறித்து முடிவு எடுக்கிறது. பூபசந்திராவில் பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு அரசு சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு அந்த நிலத்தை அரசாணையில் இருந்து விடுவித்தது.

இதை எதிர்த்து வீட்டுமனைகளை இழந்தவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிலம் அதன் உரிமையாளர்களுக்கே திரும்ப வழங்கப்பட்டது. புட்டசாமி அனைத்து விவரங்களையும் மறைத்து என் மீது இந்த குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

பேட்டியின் போது சித்தராமையா, நிலம் விடுவிக்கப்பட்டதில் தன் மீது தவறு இல்லை என்பதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார். 

மேலும் செய்திகள்