மலேசியாவில் இருந்து முதல் முறையாக 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி தூத்துக்குடிக்கு கப்பலில் வந்தது

மலேசியாவில் இருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்ட 55 ஆயிரம் டன் ஆற்று மணல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.

Update: 2017-10-22 23:00 GMT
தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் சமீபகாலமாக கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

அதே நேரத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மணல் விற்பனைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் ஆற்றுமணல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் ஆற்றுமணலை இறக்குமதி செய்து உள்ளது. இந்த ஆற்று மணலுடன் அன்னா டோரோதியா என்ற கப்பல் நேற்று முன்தினம் இரவு மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த சரக்கு கையாளும் நிறுவனமான ஜானகி டிரேடர்ஸ் நிறுவனத்தினர் கப்பலில் இருந்து மணலை இறக்கி வருகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட மணல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து ஆற்றுமணல் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்