பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Update: 2017-10-22 22:45 GMT
பெரும்பாறை,

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, கானல்காடு, தடியன்குடிசை, குப்பமாள்பட்டி, கல்லகிணறு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. தடியன் குடிசை சுற்றுலா தலமாக மாற்றப்பட்டதில் இருந்து இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்தனர். அதுமட்டுமின்றி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். அருவியில் தண்ணீர் அதிகளவு விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இதனால் ஆற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் இங்கு அதிக அளவில் வருகை தந்தனர். இவ்வாறு சிறப்பு பெற்ற இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதை வசதி இல்லை.

அருவிக்கு அடர்ந்த வனப்பகுதியில் கரடு, முரடான பாதை வழியாகவே நடந்து செல்ல வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதுமட்டுமின்றி கழிப்பறை, உடைமாற்றும் அறை உள்ளிட்டவை இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் செய்திகள்