கர்நாடகத்தில், இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்க தடை

கர்நாடகத்தில், 100 சி.சி.க்கு குறைவான என்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்க தடை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

Update: 2017-10-22 22:23 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் 1.85 கோடி வாகனங்கள் உள்ளன. இதில், 70 சதவீதம் இருசக்கர வாகனங்கள் ஆகும். அதாவது, பெங்களூருவில் 49 லட்சத்து 6 ஆயிரத்து 422 இருசக்கர வாகனங்கள் சேர்த்து மாநிலம் முழுவதும் மொத்தம் 1 கோடியே 34 லட்சத்து 39 ஆயிரத்து 67 இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதில், ஆண்கள் அதிவேகமாக செல்லும் மற்றும் மிதவேகமாக செல்லும் மோட்டார் சைக்கிள்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஸ்கூட்டரில் வலம் வருகிறார்கள். ஸ்கூட்டர்கள் எடை குறைவாகவும், என்ஜின் சி.சி.யின் அளவும் குறைவாகவும் இருக்கும்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் 100 சி.சி.க்கு குறைவான என்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ‘புதிதாக விற்பனை செய்யப்படும் 100 சி.சி.க்கு குறைவான என்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்க கூடாது. இந்த உத்தரவு ஏற்கனவே பயன்படுத்தி வரும் 100 சி.சி.க்கு குறைவான என்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு பொருந்தாது‘ என கூறப்பட்டு உள்ளது.

இந்த புதிய உத்தரவு விரைவில் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். அதாவது, பெண்கள் பயன்படுத்தும் ஸ்கூட்டரில் பெரும்பாலானவை 100 சி.சி.க்கு குறைவான என்ஜின் கொண்டவை ஆகும்.

இதுகுறித்து, போக்குவரத்து மந்திரி ரேவண்ணா கூறுகையில், ‘‘‘மாட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் இறந்த வழக்கில் நஷ்டஈடு கேட்கும் வழக்கில் மாநில அரசிடம் இருந்து ஐகோர்ட்டு விளக்கம் கேட்டது. இதற்கு, போக்குவரத்து வாகன சட்டத்தை பின்பற்றுவோம் என்று எழுத்துபூர்வமாக பதில் அளித்தோம். அதன்படி, 100 சி.சி.க்கும் குறைவான என்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிகள் அமர்ந்து செல்ல கூடாது என்பதும் ஒன்றாகும்’’ என்றார்.

இதுபற்றி கர்நாடக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பசவராஜூ கூறுகையில், ‘கர்நாடக மோட்டார் வாகன விதிமுறை 1989 பிரிவு 143 (3)–ன் படி 100 சி.சி.க்கு குறைவான என்ஜின் உள்ள மோட்டார் சைக்கிளில் பின் இருக்கைகள் இருக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும்’ என்றார்.

இதுகுறித்து போக்குவரத்து கமி‌ஷனர் தயானந்தா கூறுகையில், ‘ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்பேரில் கர்நாடக மோட்டார் வாகன விதிமுறையை பின்பற்ற இருக்கிறோம். இந்த உத்தரவு புதிதாக வாங்கும் 100 சி.சி.க்கு குறைவான மோட்டார் சைக்கிள்களுக்கு தான் பொருந்தும். மக்களிடம் கருத்து கேட்டு இந்த புதிய உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்