புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-28 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பாரதி (வயது 50). இவர்களுக்கு பிரபாகரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் பிரபாகரன் புதுக்கோட்டை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். பாலகிருஷ்ணன் கடந்த 2008-ம் ஆண்டு இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து பாரதி கடந்த 2012-ம் ஆண்டு கடலூரில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றி வரும் ஹரிதாசன் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்தநிலையில் பாரதி, தனது மகன் பிரபாகரனின் தூண்டுதலின்பேரில் சிலர் தன்னை அடித்து, துன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாரதி புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாரதியிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர்.

அப்போது பாரதி, தனது மகன் தூண்டுதலின் பேரில் தன்னை அடித்து, துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் பாரதியை புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்