கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் நாகை தீயணைப்பு நிலையத்திற்கு ‘சீல்’

கட்டிடம் பழுதடைந்து உள்ள நாகை தீயணைப்பு நிலையத்திற்கு ‘சீல்’ வைக்க அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உத்தரவிட்டார்.

Update: 2017-10-28 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் பொறையாறில் இருந்த தமிழக அரசின் போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் கடந்த 20-ந்தேதி அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதைதொடர்ந்து மறுநாள் (21-ந்தேதி) நாகையில் உள்ள தீயணைப்பு நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்தும், மரத்தூண்களும் கிழே விழுந்தது. அப்போது யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவையாகும். இதே போல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் தான் பெரும்பாலும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று நாகையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தீயணைப்பு நிலைய கட்டிடம் மிகவும் மோசமாக இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு ‘சீல்’ வைக்க கலெக்டர் சுரேஷ்குமாருக்கு, அமைச்சர் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து உதவி கலெக்டர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் தீயணைப்பு நிலையத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஆய்வின்போது நாகை பாராளுமன்ற உறுப்பினர் கோபால், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி, தாசில்தார் ராகவன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்