3–வது நாளாக வருமானவரி துறையினர் சோதனை: கடலூர் ஜோதிடரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

கடலூர் ஜோதிடர் வீட்டில் 3–வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் பங்குசந்தையில் முதலீடு செய்து இருப்பதாகவும், இதற்கு உதவியது யார் என்பது குறித்தும் ஜோதிடரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Update: 2017-11-11 23:15 GMT

கடலூர்,

அ.தி.மு.க.(அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9–ந்தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று 3–வது நாளாகவும் இந்த சோதனை நீடித்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அந்த வகையில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினருக்கு ஜோதிடம் பார்த்து வந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சரஸ்வதிநகரை சேர்ந்த சந்திரசேகர் வீட்டிலும், வீட்டின் அருகில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்ததற்கான பத்திரங்கள் ஆகியவற்றையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டுக்கு வந்தனர். பின்னர் வீட்டின் கதவுகளை பூட்டிக் கொண்டு 3–வது நாளாக சோதனை நடத்தினர். ஜோதிடர் சந்திரசேகர் பங்கு சந்தையில் அதிக அளவில் பணம் முதலீடு செய்து இருக்கிறார். இந்த பணம் அவருக்கு எப்படி வந்தது? முக்கிய பிரமுகர்களின் பணத்தை அவர் முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் ஜோதிடர் சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. வீட்டின் முன்பு கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஜோதிடருக்கு இந்த அளவுக்கு பணம் எப்படி வந்தது? காரை யாரேனும் பரிசாக வழங்கினார்களா? என்பது குறித்து ஜோதிடர் சந்திரசேகரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து 3 நாட்களாக ஜோதிடர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்