ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.8 லட்சம் கந்து வட்டி வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.8 லட்சம் கந்து வட்டி வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பெண் மனு கொடுத்தார்.

Update: 2017-11-13 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் இருந்து வந்திருந்த வேணுகோபால் என்பவருடைய மனைவி முத்துலெட்சுமி கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எனது கணவர் உடல் ஊனமுற்றவர். தமிழக அரசின் கல்வி துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனது மகன் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வருகிறார். திருச்சி திருவானைக்காவலில் உள்ள வீட்டில் நான் எனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தேன். இந்நிலையில் திருவானைக்காவலை சேர்ந்த 2 பேர் எனது மகனிடம் அதிக வட்டி வசூலித்து தர வேண்டும் என்று கூறி ரூ.1 லட்சத்தை கடனாக கொடுத்து உள்ளனர். இதற்கு வட்டியாக ரூ.8 லட்சம் வரை வசூலித்து உள்ளனர். இவ்வளவு கந்து வட்டி வசூலித்த பின்னரும் மேலும் பணம் கொடு அல்லது வீட்டை எழுதி கொடு என்று கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் நான் உயிருக்கு பயந்து ஆடுதுறைக்கு சென்று விட்டேன். கந்து வட்டி கொடுமைக்காரர்களிடம் இருந்து எனது கணவரையும், மகனையும் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அப்போது அவரது கணவர் வேணுகோபாலும் உடன் வந்திருந்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கொடுத்த மனுவில், காவிரி கரையோரம் உள்ள மேக்குடி, கீழ் பத்து கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. எனவே உய்யகொண்டான் வாய்க்காலின் வடிகாலான கொடிங்கால் மற்றும் புதுவாத்தலை பகுதியில் தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம், இந்து மதத்தை பற்றி விமர்சித்து பேசும் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரி, எங்களது முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்ட சத்திரத்தை ஆக்கிரமித்து உள்ளார். அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கோபுர மின் விளக்கை எரிய செய்யவில்லை என்றால் வருகிற 23-ந்தேதி கோவில் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று திருப்பட்டூர் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தமிழக அரசு பிறப்பித்து உள்ள உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சலுகைகளையும் தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஆர்.காம் நிறுவனம் திடீர் என்று செல்போன் சேவையை நிறுத்தி விட்டதால் அவர்களது ரீ சார்ஜ் கார்டு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இவர்களுக்கு இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வியாபாரிகள் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்