ஓய்வுபெற்ற ஜிப்மர் பெண் ஊழியர் தீயில் கருகி சாவு

புதுவையில் நடந்த தீ விபத்தில் ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர் தீயில் கருகி பரிதாபமாக செத்தார். குடிசையும் எரிந்து நாசமானது.

Update: 2017-11-29 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை திருவள்ளுவர் நகர் செபஸ்தியார் கோவில் வீதி முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காமாட்சி (வயது 70). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமான நிலையில் காமாட்சி தனியாக குடிசையில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் கொசுவர்த்தியை கொளுத்தி வைத்துவிட்டு தூங்கினாராம்.

நள்ளிரவில் கொசுவர்த்தியில் அவரது சேலை விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ குடிசைக்கும் பரவியுள்ளது. தூக்கத்தில் எழுந்த காமாட்சி தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கியபடி உதவுமாறு கேட்டு அபயக்குரல் எழுப்பினார். குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்து விட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென்று பிடித்து எரிந்ததால் அணைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருந்தபோதிலும் குடிசை வீடு எரிந்த நிலையில் தீயில் கருகி காமாட்சி பரிதாபமாக செத்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடிசை வீட்டில் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்