நாகை மாவட்டத்தில் பலத்த மழை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2017-11-29 23:00 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைதொடர்ந்து நாகை மாவட்டத்தில் 30-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது தெற்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைக்கொண்டு உள்ளது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் எனவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இடையிடையே வெயிலும் சுட்டெரித்தது. மேலும், நாகையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் நாகையில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மழையின் காரணமாக நாகை - நாகூர் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். நேற்று நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

அதேபோல நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக வாய்மேட்டை அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

வேதாரண்யம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்