ஆதிதிராவிடர் பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்க காங்கிரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை

ஆதிதிராவிடர் பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்க காங்கிரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பரமேஸ்வர் கூறினார்.

Update: 2017-12-13 00:22 GMT
பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்து எடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்திற்கு பிறகு கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறும் கொலைகளை முன்வைத்து பா.ஜனதாவினர் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். கொலையாளிகளை கைது செய்ய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். அதை விடுத்து மதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெற பா.ஜனதாவினர் முயற்சி செய்வது சரியல்ல.

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பா.ஜனதாவினர் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதை எக்காரணம் கொண்டும் சகித்துக்கொள்ள மாட்டோம். நான் இந்த மாதம் 27-ந் தேதி கோலாரில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். இதற்காக முழு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். சித்தராமையா 124 தொகுதிகளிலும், நான் 100 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

ஆதிதிராவிடர் பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்க காங்கிரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நீதிபதி சதாசிவா ஆணையத்தை அமைத்ததே காங்கிரஸ் அரசு தான். அதனால் இந்த விஷயத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவை நாங்கள் ஆதரிப்போம். உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாதிக சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர்.

இதில் எனக்கு எதிராக சிலர் தனிப்பட்ட நோக்கத்துடன் கோஷங்களை எழுப்பினர். நான் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு அறிந்து முடிவு எடுப்பதாக சித்தராமையா ஏற்கனவே கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வருகிற 16-ந் தேதி பதவி ஏற்கிறார். அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் நடைபெறும் கட்சியின் முதல் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். அதற்கான இடம் மற்றும் தேதி இன்னும் இறுதி ஆகவில்லை. சிக்கமகளூரு அல்லது பெங்களூருவில் இந்த கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்