சீனர்களின் நூடுல்ஸ் மோகம் குறைகிறது?

சீனாவிலேயே நூடுல்ஸ் விற்பனை குறைந்துவருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2017-12-30 07:19 GMT
சீனர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றான நூடுல்ஸ், நீண்டகாலமாக அவர்களின் விருப்பமான உணவாக இருந்துவருகிறது. ஆனால் தற்போது சீனாவிலேயே நூடுல்ஸ் விற்பனை குறைந்துவருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எளிதாக சமைக்கக்கூடிய, விலை மலிவான உடனடி நூடுல்ஸ் நீண்டகாலமாக சீனாவின் சிறந்த வசதியான உணவாக இருந்து வந்துள்ளது.

மாணவர்களுக்கு சிற்றுண்டியாகவும், ரெயில் பயண உணவாகவும், தொழிலாளர் உணவாகவும் அதிகம் விரும்பி உண்ணப்படும் நூடுல்ஸ், சீனாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு சீனாவிலும் ஹாங்காங்கிலும் மொத்தம் 46.2 பில்லியன் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு விற்பனை, 38.5 பில்லியன் பாக்கெட்டுகளாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக உலக உடனடி நூடுல்ஸ் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. இது 17 சதவீத வீழ்ச்சி ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக பிற நாட்டு உடனடி நூடுல்ஸ் சந்தைகள் ஓரளவு நிலையாக இருந்துவந்துள்ளன. 2015-ல் இந்தியாவில் குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் திரும்பப் பெறப்பட்டபோது பெரும் வீழ்ச்சி கண்டது மட்டுமே இதில் விதிவிலக்கு.

நூடுல்சின் தாயகமான சீனாவிலேயே அதன் விற்பனை குறைந்துவருவது, அந்நாடு பல்வேறு வழிகளில் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

உணவு தொடர்பாக சீன நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவது இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

“இந்த உடனடி நூடுல்ஸ் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சீனாவின் நுகர்வு முறையில் ஏற்பட்டுள்ள திருப்பத்தைக் காட்டுகிறது” என்று சர்வதேச வர்த்தக வளர்ச்சிக்கான சீனக் கழகத்தைச் சேர்ந்த சாவ் பிங் தெரிவித் திருக்கிறார். வயிற்றை நிரப்புவதைவிட தரமானதை இன்றைய நுகர்வோர் விரும்புவதாக அவர் கூறுகிறார்.

இன்று உடனடி நூடுல்சை பெரிதும் விரும்பி உண்பவர் களாக தொழிலாளர்கள் உள்ளனர். அதற்குக் காரணம், வீட்டை விட்டு வெகு தொலைவில் தனியே வசிக்கும் அவர்கள், பெரும்பாலும் குறைவான சமையல் வசதி கொண்ட இடத்தில் தங்கியிருக்கின்றனர். தமது குடும்பத்தினருக்கு அதிக பணம் அனுப்புவதற்காக பணத்தைச் சேமிப்பதில் அக்கறையாக உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு வரை கிராமத்தில் இருந்து நகர்ப்புறங்களுக்குக் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஆனால் அதற்கடுத்த இரண்டாண்டுகளில் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு சுமார் 17 லட்சம் குறைவான தொழிலாளர்கள் நகரங் களில் வாழ்ந்திருக்கின்றனர். இதனால், நூடுல்ஸ் சாப்பிடுவது கணிசமாகக் குறைந்திருக்கும் என்று கருதப்படு கிறது.

சீனாவில் ரெயில் பயணத்தின்போது நூடுல்ஸ் சாப்பிடுவதை வசதிக்குறைவாக பல பயணிகள் கருதுகிறார்கள். அந்நாட்டில் ரெயில்களும், ரெயில் நிலையங்களும் மேம்பட்டுள்ளன, பயணங்கள் விரைவாகியுள்ளன என்ற போதும், சர்வதேச உணவுகளை தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. ரெயில்வே துறையில் நூடுல்ஸ் விற்பனைக் குறைவுக்கு இது ஒரு காரணம்.

சீன அரசுத் தகவல்கள்படி, சுமார் 70 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் 95 சதவீதத்தினர் இணையத்துக்கு ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். அவர்கள் இணையம் மூலம் விரும்பி ஆர்டர் செய்யும் உணவுகளாக நூடுல்ஸ் தவிர்த்த மற்றவை உள்ள தாகக் கருதப்படுகிறது.

இவையெல்லாம் இருந்தாலும், இன்றும் உலகின் மிகப் பெரிய உடனடி நூடுல்ஸ் சந்தையாக சீனா உள்ளது.

பக்கத்து போட்டியாளரான வியட்நாமைவிட சுமார் 3 மடங்கு அதிக நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சீனாவில் விற்கப்படுகின்றன.

உண்மையில், சீனா பயன்படுத்தும் மொத்த நூடுல்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் சேர்ந்து பயன் படுத்திவரும் நூடுல்ஸ் அளவுக்குச் சமம்.

இதனால், சர்வதேச நூடுல்ஸ் தயாரிப்பாளார்கள் சீன சந்தையில் இருந்து வெளியேற விரும்பவில்லை.

உதாரணமாக, ஜப்பானின் முன்னணி உடனடி நூடுல்ஸ் உணவு நிறுவனம், ஹாங்காங்கில் பங்குச் சந்தையில் புதிதாக ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அதனால் சுமார் 145 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் உயரும் என்று அது எதிர்பார்க்கிறது.

ஜப்பான் நிறுவனம் ஒன்று ஹாங்காங்கில் இவ்வாறு திட்டமிடுவது மிகவும் அரிதானது ஆகும். ஆனால், சீனாவில் புதிய திட்டங்களை அந்நிறுவனம் முன்னெடுக்கிறது. அங்கு அந்த நிறுவனம் 5-வது பெரிய பிராண்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

“நூடுல்ஸ் சாப்பிடுவதை சில வாடிக்கையாளர்கள் நிறுத்திவிட்டனர். ஆனால், பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் தரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்” என ஜப்பான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கியோடாகா அன்டோ கூறுகிறார்.

“உயர்தர உற்பத்திப் பொருட்களை விநியோகம் செய்வதன் மூலம் நமது வர்த்தகத்தை வளர்க்க அதிக வாய்ப்பு ஏற்படும்” என்பது அவர் கருத்து.

உலகெங்குமே உணவு முறை மாறிவருகிறது. நம்மவர்கள் பலரும் சோற்றுக்கு அஞ்சி, கோதுமை, ஓட்சை நாடவில்லையா? 

மேலும் செய்திகள்