சமத்துவ சமுதாயம் உருவாகும் வரை ஏற்றத்தாழ்வுகள் நீங்காது சித்தராமையா பேச்சு

கனமான குரலில் பேசினால் ஆணவக்காரன் என்கிறார்கள் என்றும், சமத்துவ சமுதாயம் உருவாகும் வரை ஏற்றத்தாழ்வுகள் நீங்காது என்றும் சித்தராமையா கூறினார்.

Update: 2017-12-31 22:45 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த ஒரு விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

அம்பேத்கர் சாதி, மதம், பழக்க வழக்கம், நடைமுறைகளை ஆராய்ந்து பார்த்து அரசியல் சாசனத்தை நிறுவி இருக்கிறார். இதை விட ஒரு சிறப்பான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது. இதை இதேநிலையில் தொடர்ந்து அனுசரித்து செல்ல வேண்டும். இந்த அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசுபவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தகுதியற்றவர்கள்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தான் மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்கிறார்கள். ஒவ்வொருவரும் மதசார்பற்றவராக இருக்க வேண்டும். சாதி, மதவாதம் செய்தால் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆகும். இந்த அடிப்படை விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் அரசியல் சாசனத்தை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஊடகங்கள் குரல் கொடுக்க வேண்டும். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் மக்கள் ஏமாற்றப்படுவது தொடர்ந்து நடக்கிறது. சமத்துவ சமுதாயம் உருவாகும் வரை இந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்காது. அதனால் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். எங்கள் அரசை ஊடகங்கள் விமர்சிப்பதை நான் எதிர்க்கவில்லை.

ஆனால் உண்மை தகவலின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். நான் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவன் கிடையாது. எனது தந்தை கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போது நான் பி.எஸ்.சி. படித்து கொண்டிருந்தேன். நான் சட்டம் படித்தபோது தாலுகா வளர்ச்சி வாரிய தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் என்னிடம் கூறினர்.

ஆனால் எனது தந்தை அதை ஏற்கவில்லை. தேர்தலில் நிற்பதாக இருந்தால் வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஊர் மக்கள் எனது தந்தையை சம்மதிக்க வைத்தனர். ஆனால் செலவுக்கு அவர் பணம் கொடுக்கவில்லை. ஆயினும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதன் பிறகு நான் அரசியலில் வளர வேண்டும் என்று எனது தந்தை விரும்பினார்.

அதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தேன். அதைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். என்னை மதவாதி, ஆணவக்காரன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் மனிதர்களை மனிதர்களாகத்தான் பார்க்கிறேன். நேசிக்கிறேன். என்னைப் போன்ற கீழ்சாதிக்காரர்கள் கனமான குரலில் பேசினால், ஆணவக்காரன் என்று குறை கூறுகிறார்கள்.

மேல்சாதிக்காரர்கள் அதேபோல் பேசினால் அது சரி என்று சொல்கிறார்கள். என்னை சிலர் அம்பேத்கர், தேவராஜ் அர்சுடன் ஒப்பிடுகிறார்கள். அவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அதனால் என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம். நடிகர் பிரகாஷ்ராஜ் யாரும் சொல்லக்கூடாததை சொல்லவில்லை. தேவை இல்லாமல் அவருடைய கருத்தை சிலர் குறை கூறுகிறார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார். 

மேலும் செய்திகள்