சுற்றுலா போலீசாருக்கு நீல கலர் தொப்பி டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் வழங்கினார்

சுற்றுலா போலீசாருக்கு நீல கலர் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதனை டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் வழங்கினார்.

Update: 2018-01-01 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் காவல்துறையில் ‘சுற்றுலா போலீஸ்’ என்று ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கான காவல்நிலையம் கடற்கரை சாலையில் ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் உள்ளது.

சுற்றுலா போலீசார் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தலங்களுக்கு செல்வதில் ஏதாவது சந்தேகம் என்றால் அதனை தீர்த்து வைப்பர். மேலும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுவர். இவர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இவர்களை மற்ற போலீசாரிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காண்பிக்க வேண்டும் என்பதற்காக தற்போது சீருடையில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு கலர் தொப்பிக்கு பதிதாக புதிதாக நீல கலர் தொப்பி மற்றும் கையில் நீல கலர் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீல கலர் தொப்பி மற்றும் பேட்ஜ் வழங்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடந்தது. நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் கலந்து கொண்டு பேட்ஜ் மற்றும் தொப்பியை வழங்கி சுற்றுலா காவலர்களின் ரோந்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ்ரஞ்சன், சந்திரன், அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்