50 ஆண்டுகளுக்கு பிறகு கைலாசநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்

அரும்பாவூரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கைலாசநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-01-01 22:30 GMT
அரும்பாவூர்,

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், 12 மணிக்கு சுவாமி புறப்பாடும், மதியம் 3 மணியளவில் கோவில் அருகேயுள்ள சித்தேரியில், நூற்றுக்கணக்கான பேரல்களை கொண்டு மிதவை செய்து அதன் மேல் தெப்பம் வைக்கப்பட்டு நீரில் மிதந்து கொண்டிருந்தது. இந்த தெப்பத்தில் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் கரையில் நின்றபடியே ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்த தெப்பத்தை வணங்கி வழிபாடு செய்தனர்.

தெப்ப உற்சவம்

பின்னர் தெப்பத்தில் இருந்தவர்கள் தோனி மூலம் அங்கிருந்து தெப்பத்தை நகர்த்தி கொண்டு சென்றனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றது. மேலும் புத்தாண்டையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடும் நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடந்தது. 9 மணிக்கு ஊஞ்சல் சேவையுடன் விழா நிறைவு பெற்றது. இந்த தெப்ப உற்சவத்தில் அரும்பாவூர், மேட்டூர், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, தொண்டமாந்துறை, கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மருத்துவக்குழு

மக்கள் ஒரே நேரத்தில் சித்தேரி பகுதியில் கூடியதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக்குழுவினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். ஏரிக்குள் மிதந்து சென்ற தெப்பத்தை பின்தொடர்ந்தபடியே தீயணைப்புத்துறையினர் தங்களது படகில் பாதுகாப்பிற்காக வந்தனர். ஆம்புலன்சு வாகனமும் தயார் நிலையில் இருந்தது. திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்