இன்று முதல் 3 நாட்களுக்கு தினமும் ரூ.1 சம்பளத்தில் அரசு பஸ்களை இயக்க முடிவு

பொங்கல் பண்டிகைக்கு தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு தினமும் ரூ.1 சம்பளம் பெற்றுக்கொண்டு அரசு பஸ்களை இயக்க முடிவு செய்து திருப்பூர் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Update: 2018-01-10 23:04 GMT

திருப்பூர்,

திருப்பூர் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் தலைவர் வடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–

பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக போதிய பஸ் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். பனியன் தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கி அதிகம் பேர் பணியாற்றி வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் எங்களால் முடிந்த உதவியை செய்யும் நோக்கத்துடன், எங்கள் சங்கத்தின் டிரைவர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

அதன்படி எங்கள் சங்கத்தின் கீழ் உள்ள டிரைவர்கள் முதல்கட்டமாக 25 பேர் நாளை(இன்று) முதல் 13–ந் தேதி வரை அரசு பஸ்களை இயக்க உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் எங்கள் டிரைவர்களுக்கு தினமும் ரூ.1 சம்பளம் வழங்கினால் போதும். எங்கள் சங்கத்தின் டிரைவர்கள் முறையாக லைசென்சு உள்ளிட்டவை வைத்துள்ளனர். அரசு போக்குவரத்து திருப்பூர் பணிமனை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். நாளை(இன்று) முதல் அரசு பஸ்களை எங்களுடைய டிரைவர்கள் இயக்க உள்ளனர். சேவை மனப்பான்மையுடன் நாங்கள் இதை செய்கிறோம்.

இதுபோல் திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும் முன் வந்து முடிந்த அளவுக்கு தகுதியுள்ள டிரைவர்களை கொடுத்து, அரசு பஸ்களை இயக்கி தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சங்கத்தின் செயலாளர் நடராஜன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்