பழனி மலைக்கோவிலில் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் சாமி தரிசனம்

பழனி மலைக்கோவிலில் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் பெண் பக்தர் ஒருவர் முடி காணிக்கை செலுத்தினார்.

Update: 2018-01-11 22:30 GMT
பழனி,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராட்ச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக இருப்பவர் டாக்ல்ஸ்புரூஷ். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூச திருவிழாவையொட்டி தனது துறையை சேர்ந்த மாணவர்களுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். முருகப்பெருமானின் அருட்பார்வை பட்டதும் இவர் தீவிர முருக பக்தராக மாறினார்.அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தனது துறையை சேர்ந்த மாணவர்களுடன் தைப்பூச திருவிழா சமயத்தில் பழனிக்கு வரத்தொடங்கினார். அப்போது அவருக்கு தமிழர்களின் கலாசாரம் மிகவும் பிடித்து போனது. இதனால் டாக்ல்ஸ்புரூஷ் என்ற தனது பெயரையும் சுந்தரமூர்த்தி என மாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில் 11-வது ஆண்டாக தனது துறையை சேர்ந்த மாணவர்களுடன் டாக்ல்ஸ்புரூஷ் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தார். டாக்ல்ஸ்புரூஷ் உள்பட அவர்கள் அனைவரும் தமிழக கலாசாரப்படி வேட்டி-சேலை அணிந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாகவே சென்றனர்.

பின்னர் உச்சிகால பூஜையில் மூலவரான முருகப்பெருமானை தரிசனம் செய்த அவர்கள், போகர் சன்னதியிலும் வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து இவர்களுடன் வந்த கேத் என்ற அமெரிக்க பெண் முடிகாணிக்கை செலுத்தினார். பின்னர் அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையை சேர்ந்த வழிகாட்டி ஜெகநாதன் என்பவர் அவர்களை பழனிக்கு அழைத்து வந்தார்.

மேலும் செய்திகள்