அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி விரைவில் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-01-15 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள புதிய அதிநவீன 16 சிலைஸ் சி.டி. ஸ்கேன் கருவியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய சி.டி. ஸ்கேன் கருவியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியும், மேமோகிராம் வசதியும், கலர்டாப்லர் ஸ்கேன் வசதியும் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

5 நிமிடத்தில்....

ஏற்கனவே உள்ள சி.டி. ஸ்கேன் கருவிகள் மூலம் நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள 20 நிமிடம் ஆகும். தற்பொழுது அமைக்கப்பட்டு உள்ள இந்த புதிய அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி மூலம் நோயாளிகளுக்கு 5 நிமிடத்திற்கு குறைவான நேரத்திற்குள் முழு உடல் பரிசோதனை செய்ய முடியும். மேலும் விபத்து காயம் ஏற்படும்போது காயம் பட்டவருக்கு வெறும் 20 நொடிகளுக்குள் முழு உடற்பரிசோதனை மேற்கொள்வதுடன் மூளை தொடர்பான பரிசோதனைகள் 1 நொடியில் மேற்கொள்ளலாம். மேலைநாடுகளுடன் ஒப்பிடும் வகையில் தமிழகத்தில் மருத்துவத்துறையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

பொங்கல் விழா

மேலும் அரசு மருத்துவமனைகளில் விரைவில் ரத்த பரிசோதனை முடிவுகள் உள்ளிட்டவைகள் நோயாளிகளுக்கு ஆன்லைனில் உடனுக்குடன் தரப்படுவதற்கு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்புகள் நேராமல் தடுப்பதற்கு சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் 44 சி.டி. ஸ்கேன் கருவிகள், 16 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள் மற்றும் 6 ஸ்கேப் லேப்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார். என்றார்.

தொடர்ந்து அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இதில் உதவி கலெக்டர் கே.எம்.சரயு, அரசு மருத்துவ கல்லூரி டீன் சாரதா, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்