‘ஹஜ்’ மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

‘ஹஜ்’ மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-01-18 23:00 GMT
திருச்சி,

முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித யாத்திரை செல்வதற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு திடீர் என ரத்து செய்து அறிவித்து உள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஜனவரி 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்து இருந்தார்.

அதன்படி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளர் மன்சூர் அலி, மாவட்ட தலைவர் அப்துல் குத்தூஸ், மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், ராஜா நசீர், கோபால், மகளிர் அணி மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ‘ஹஜ்’ வழிபாட்டு மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது, ரத்து செய்வதாக அறிவித்ததை வாபஸ் வாங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்