மனைவியை வீட்டை விட்டு விரட்டிய ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு கூடுதலாக 20 பவுன் நகைகள் வரதட்சணை கேட்டதாக புகார்

மனைவியை வீட்டை விட்டு விரட்டியதாக ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-02 20:30 GMT
சங்கரன்கோவில்,

கூடுதலாக 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டை விட்டு விரட்டியதாக ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணுவ வீரர்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பி.ரித்தியபட்டியை சேர்ந்த பால்ராஜ் மகள் கீதா(வயது 35). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் கொம்பச்சியாபுரம் கோவிந்தராஜ் மகன் ராஜீவ்காந்திக்கும்(37), கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ராஜீவ்காந்தி ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை

திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு கீதாவை கணவர் குடும்பத்தினர் கொடுமை படுத்தினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கூடுதல் வரதட்சணையாக தரவேண்டும் என கணவரும், உறவினர்களும் அவரை வற்புறுத்தி உள்ளனர். இதற்கு மறுத்ததால், கூடுதல் வரதட்சணையை கொடுக்காமல் வீட்டிற்குள் நுழையக் கூடாது எனக்கூறி வெளியே விரட்டினர்.

5 பேர் மீது வழக்கு

அங்கிருந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்த அவரை தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு உறவினர்களுடன் சேர்ந்து ராஜீவ் காந்தி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில், அவருடைய கணவர் ராஜீவ்காந்தி, உறவினர்கள் ராமசுப்பு(58), சின்னவீராச்சாமி(45), இவருடைய மனைவி ராதா(39), மகன் அசோக்குமார்(21) ஆகிய 5 பேர் மீது சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்