புதுவையில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் - சாமிநாதன்

புதுவையில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளதாக பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் கூறினார்.

Update: 2018-02-02 23:00 GMT
புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழைகள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதை புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி வரவேற்கிறது. 2022-க்குள் அனைவருக்கும் சொந்தவீடு வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது. 1 கோடி பேருக்கு இலவச வீடு இந்த ஆண்டிற்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும், சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் 75 லட்சம் பேருக்கு கடன் வழங்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வரிகளில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து பாரதீய ஜனதா சகாப்தம் படைத்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்களே பாராட்டும் அளவுக்கு பட்ஜெட் உள்ளது. புதுவைக்கு கூடுதல் நிதியை பெற மத்திய அரசால் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ள நாங்கள் 3 பேரும் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி, நிதித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து பேச உள்ளோம்.

முதல்-அமைச்சர் நாரா யணசாமி தலைமையிலான அரசு கவர்னர் கிரண்பெடியுடனான மோதல் போக்கினை நிறுத்தி உள்ளது. புதுவை மாநில வளர்ச்சிக்கு அவர்கள் கவர்னர் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் உள்ளனர்.

மக்களும் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே மக்கள் விரும்பும் வகையில் விரைவில் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்துக்கு பாரதீய ஜனதா உறுதுணையாக இருக்கும். புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த 2 ஆண்டுகளாக முடங்கிப்போய் உள்ளது.

மேலும் செய்திகள்