அரசு மருத்துவ கல்லூரியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் அமைச்சர் தகவல்

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு தொடங்கும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2018-02-08 02:16 GMT
கரூர்,

கரூர் அரசு மருத்துவ கல்லூரி காந்திகிராமம் சணப்பிரட்டியில் அமைக்கப்படுகிறது. மருத்துவ கல்லூரி கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

பொக்லைன் எந்திரம் மூலம் மண் தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான பணி நடைபெற்று வருவதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கட்டிட வரைபட அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். அதன்பின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால் பணிகள் நடைபெறவில்லை. தற்போது வழக்குகள் முடிந்த பின் கரூர் நகரத்தின் மையப்பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க பணிகள் நடந்து வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரிக்கு ஜெயலலிதா ரூ.229 கோடி நிதி ஒதுக்கியிருந்தார். நகரின் மைய பகுதி என்பதால் கட்டிடத்தின் வடிவமைப்புகள் மாறுகிறது. இதனால் கூடுதல் நிதியாக ரூ.40 கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி தந்துள்ளார். மொத்தம் ரூ.269 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படுகிறது.

கட்டுமான பணிகள் ஒரு வருட காலத்திற்குள் முடிந்து விடும். அடுத்த ஆண்டு (2019) முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும். மொத்தம் 150 இடங்கள் ஒதுக்கப்படும். மற்ற கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக நவீன முறையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது. 800 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உடன் அமைகிறது. 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 17 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, பொதுப்பணித்துறை (மருத்துவப்பணிகள்) செயற்பொறியாளர் மாதையன், உதவி பொறியாளர்கள் தவமணி, மகாவிஷ்ணு, சிவக்குமார், அ.தி.மு.க. அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், முன்னாள் கரூர் ஒன்றிய குழு தலைவர் திருவிகா, நகர செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாணவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் தானேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொரணி கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து கரூர் கோடங்கிபட்டி, ஆண்டாங்கோவில் புதூர் மந்தை, செவ்வந்திபாளையம் ஆகிய இடங்களில் நடந்த அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் செய்திகள்