மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததால் மூளைச்சாவு: ஒப்பந்த ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததால் மூளைச்சாவு அடைந்த ஒப்பந்த ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

Update: 2018-02-08 04:43 GMT
ராயபுரம்,

சென்னை மணலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). இவர் மணலியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் தனது தாயார் தெய்வகனியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் இறங்கியபோது திடீரென எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கடந்த 5-ந் தேதி ராயபுரம் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு தலைப்பகுதியில் ரத்த கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் வெங்கடேசன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வெங்கடேசன் மூளைச்சாவு அடைந்தார். உடனடியாக அவருடைய உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்பாக டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கினர். அதன்பிறகு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வெங்கடேசன் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இரண்டு கைகள், தோல் போன்ற உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

மேலும் செய்திகள்