வருவாய்த்துறை அலுவலர்கள் 2–வது நாளாக போராட்டம் தாலுகா அலுவலகங்களுக்கு பூட்டு; பணிகள் பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று 2–வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-08 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று 2–வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்


வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணித்தன்மைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் தொடங்கியது.

2–வது நாளாக...

நேற்று 2–வது நாளாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தாசில்தார்கள் கலந்து கொண்டதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல தாலுகா அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் ஆகியவற்றுக்கு பூட்டு போடப்பட்டு இருந்தது.

பணிகள் பாதிப்பு

இந்த போராட்டத்தில் சுமார் 600–க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆவணங்கள் தேங்கின. பணிகள் பாதிக்கப்பட்டன. சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் தேங்கின. இதனால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்