கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-19 22:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. இதில் பயிற்சி கலெக்டர் கார்மேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

அம்பாத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் கிராமத்தில் சாலை அமைத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். இதேபோல மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும் சேதமடைந்துவிட்டது. எனவே, சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி கிராம மக்கள் காலிக்குடங் களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, காமாட்சிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 10 மாதங் களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆலத்தூரான்பட்டிக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். மேலும், ஒரு குடம் உப்பு தண்ணீர் ரூ.5-க்கும், குடிநீர் ரூ.10-க்கும் வாங்கி வருகிறோம். எனவே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

கோபால்பட்டியை சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் கொடுத்த மனுவில், குரும்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாளராக வேலைபார்த்து ஓய்வுபெற்றுவிட்டேன். இந்த சங்கத்தில் எனக்கு சேமிப்பு கணக்கு உள்ளது. எனது கணக்கில் உள்ள பணத்தை மருத்துவ செலவிற்கு எடுக்க சங்க நிர்வாகம் மறுக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்துமக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தங்கராஜ் கொடுத்த மனுவில், குஜிலியம்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு சொந்தமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி கடத்துகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் 279 மனுக்கள் பெறப்பட்டன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்