புதுவையில் பா.ஜ.க.வால் கால் ஊன்றவே முடியாது, அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

புதுவையில் பா.ஜ.க.வால் கால் ஊன்றவே முடியாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

Update: 2018-02-19 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணி குறித்தும் அவர் விமர்சித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதமை சந்தித்து விஜயவேணி எம்.எல்.ஏ. புகார் செய்தார். மேலும் வன்கொடுமை தடுப்பு பிரிவிலும் சாமிநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜயவேணி எம்.எல்.ஏ.வை தரக்குறைவாக பேசிய சாமிநாதனை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் மகளிர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட சாமி நாதன் ஆயிரம் வாக்குகள் கூட வாங்கவில்லை. அவருக்கு சட்டமன்றம், மக்களை பற்றி எதுவுமே தெரியாது. அப்படி இருக்கும் போது அவரால் எப்படி வெற்றிபெற முடியும். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வான விஜயவேணியை அவர் தரக்குறைவாக பேசியுள்ளார். எனவே காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை கைது செய்யும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும். புதுவையில் பா.ஜ.க.வால் கால் ஊன்றவே முடியாது. சாமிநாதனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர். பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் திடீரென பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதனின் உருவ பொம்மையை பாடையில் கட்டி கொண்டு வந்தனர். பின்னர் அதற்கு தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்