5 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி

கோலாப்பூரில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி சிவஜோதியை எடுத்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 5 என்ஜினீயரிங் மாணவர்கள் உயிரிழந்தனர்.

Update: 2018-02-19 22:11 GMT
கோலாப்பூர்,

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோலாப்பூர் மாவட்டத்திலும் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. இதையொட்டி சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் சிவஜோதியை எடுத்துக்கொண்டு மாணவர்கள் பலர் லாரி ஒன்றில் புனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். லாரியின் பின்னால் 2 மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் அதிகாலை 5 மணியளவில் ஊர்வலம் நாகாவ் பாட்டா பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் மீதும், சிவஜோதியை எடுத்துச்சென்ற லாரியின் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டதுடன், சிவஜோதியை எடுத்துச்சென்ற மாணவர்கள் சென்ற லாரியும் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற மாணவர்கள் மற்றும் லாரியில் இருந்த மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு 5 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த 29 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பலியான 5 மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்களது பெயர் கேத்தன் பிரதீப்(வயது23), அமித் சஞ்சய்(23), அருண் அம்பாதாஸ்(22) சுஷாந்த் விஜய்(22), பிரவீன் சாந்தாராம்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் சாங்கிலியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் விபத்தில் சிக்கி பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விபத்தில் பலியான மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என வருவாய் துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்