தாம்பரம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

தாம்பரம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவதாக மிரட்டியதால் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

Update: 2018-02-20 00:29 GMT
வண்டலூர்,

சென்னை தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் பெரியார் நகர் 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண், காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்துள்ள செட்டிபுண்ணியம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மனைவி துளசி(வயது 35) என்பது தெரிந்தது.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையான துளசியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட போன் எண்ணில் இருந்து அடிக்கடி துளசியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

கொலை நடந்த அன்றும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த செல்போன் எண்ணுக்கு உரிய நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், திருப்போரூரை அடுத்த தையூர் கிராமத்தைச்சேர்ந்த அப்பு முருகன்(26) என்பது தெரிந்தது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அவர், திருப்போரூர் பகுதி பா.ஜனதா பிரமுகராகவும் இருந்து வருகிறார்.

போலீசாரிடம் முதலில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கொடுத்த அவரை, மணிமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது அவர், வரதராஜபுரத்தில் உள்ள அந்த வீட்டில் வைத்து துளசியை கழுத்து அறுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அப்பு முருகன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

செட்டிபுண்ணியத்தை சேர்ந்த துளசியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருக்கமாக பழகினோம். அது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி துளசியுடன் தனிமையில் இருந்து வந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் செய்வதற்காக வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த தகவலை தெரிந்துகொண்ட கள்ளக்காதலி துளசி, என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். பணம் தரவில்லை என்றால் எனக்கு நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்திவிடுவதாகவும் மிரட்டினார்.

கடந்த 15-ந்தேதி இரவு துளசியை வரதராஜபுரத்தில் உள்ள நாகூர் என்பவரின் வீட்டில் சந்தித்து பேசிய போது எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த நான், துளசியின் கை, கால்களை கயிற்றால் முதலில் கட்டினேன். பின்னர் அதே கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கினேன்.

இதில் மயக்கம் அடைந்த துளசியின் கழுத்தை, கத்தியால் அறுத்துக்கொலை செய்துவிட்டு தப்பித்துவிட்டேன். ஆனால் போலீசார் என்னுடைய செல்போன் அழைப்பை வைத்து என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான அப்பு முருகனை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்