டிரைவரின் கவனம் சிதறுவதை கண்டுபிடிக்கும் கருவி

டிரைவர்களின் கவனம் சிதறுவதை கண்டுபிடிக்கும் கருவி வந்துவிட்டது.

Update: 2018-02-20 09:56 GMT
விபத்துகள் பெரும்பாலும் டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி டிரைவர்களின் கவனம் சிதறுவதை கண்டுபிடிக்கவும் ஒரு கருவி வந்துவிட்டது.

முன்னாலும், பின்னாலும் வரும் வாகனத்தை கவனிக்காமல் ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டு பயணிப்பது, யோசனையில் மூழ்கியபடியும், பாதித் தூக்கத்திலும் வண்டி ஓட்டுவது, போதையில் நிதானமிழந்து வாகனத்தை இயக்குவது என டிரைவர்களின் அசட்டுத்தனத்தால் விளைந்த விபத்துகளே அதிகம்.

வாகனத் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான புகாட்டி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் நிசான் ஆகியவை இணைந்து, டிரைவர்களின் கவனக்குறைவை கண்டுபிடித்து எச்சரிக்கும் புதுமையான கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதில் 6 கேமராக்கள் இணைக்கப்பட்டிருக்கும். டிரைவரின் கருவிழி அசைவை இமைக்காமல் கண்காணிக்கும் இந்தக் கருவி, அவரது பார்வை சாலையில் பதிகிறதா? என்பதை அமைதியாக அலசிக் கொண்டிருக்கும். 0.05 வினாடிக்கு ஒருமுறை இந்த கண்காணிப்பு நடக்கிறது. இதனால் டிரைவர் கவனக்குறைவாக இருந்தால் நொடிப் பொழுதில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டு, விபத்தின்றி பயணிக்க துணை செய்கிறது.

கடந்த 2016 முதலே இந்த சாதனத்தை புகாட்டி நிறுவனம் சோதனை செய்து வருகிறது. 10 கிலோமீட்டர் பயணப்பாதையில், டிரைவர்களை 25 முறை பயணிக்க வைத்து இவை சோதனை செய்யப்பட்டன. அதில் 5 சதவீதம் முதல் 7 சதவீத நேரத்தில் டிரைவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. அதுவே ஆபத்தான நேரம் என்பது தெளிவாகிறது. 

‘‘வாழ்வுக்கும், சாவுக்குமான இடைவெளியாக கருதப்படும் அந்த ஆபத்தான நேரத்தை கண்டுபிடிப்பதே, அதை வெல்வதற்கான முதல் வழி’’ என்கிறார்கள் இந்த சாதனத்தை ஆராய்ச்சி செய்பவர்கள். விரைவில் இந்த சாதனம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்