துப்பாக்கியால் சுட்டு பயிற்சி காவலர் தற்கொலை

ஆவடி சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி காவலர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-22 23:00 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த ராஜீவ்காந்தி நகரில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு ஒரு வருட போலீஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ்சந்தர் ராய் (வயது 23) என்பவர் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். அடுத்த மாதம் இவருக்கு பயிற்சி நிறைவடைகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கைலாஷ்சந்தர்ராய், கவாத்து மைதானம் அருகே துப்பாக்கிகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் 3 முறை தனது வலது நெற்றியில் சுட்டுக்கொண்டார்.

துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த சககாவலர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது கைலாஷ் சந்தர்ராய், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, பயிற்சி காவலர் கைலாஷ் சந்தர்ராய் எதற்காக தற்கொலை செய்துகொண்டார். அதிகாரிகள் தொல்லையா? அல்லது குடும்ப பிரச்சினையா? கடின பயிற்சியா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்.

இன்னும் ஒரு மாதத்தில் பயிற்சி முடிவடைய உள்ள நிலையில் பயிற்சி காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்