பள்ளிப்பட்டில், ரேஷன் கடை புதிய கட்டிடம் திறப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் பள்ளிப்பட்டில் ரேஷன் கடை புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.

Update: 2018-02-24 22:30 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி பஸ் நிலையத்தில், ரேஷன் கடைக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்டுவதற்காக திருத்தணி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நரசிம்மன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் ஒதுக்கினார்.

அந்த நிதியை கொண்டு ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அது திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்த கட்டிடத்தை நரிக்குறவர் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து அதில் தங்கி குடித்தனம் நடத்தி வந்தனர்.

எனவே ரேஷன் கடை புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான செய்தி, ‘தினத்தந்தி’ யில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ரேஷன் கடை புதிய கட்டிடத்துக்கு மின் இணைப்பு பெற்றனர்.

இந்தநிலையில் நேற்று ரேஷன் கடை புதிய கட்டிடத்தை திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவருமான பி.எம்.நரசிம்மன் திறந்து வைத்தார். பின்னர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை வழங்கினார்.

இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி.சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்