ஹரிகரா அருகே லாரி மோதி 2 வயது குழந்தை சாவு

குழந்தை செங்கல்சூளையில் விளையாடி கொண்டிருந்தபோது பரிதாபம்.

Update: 2018-02-25 23:00 GMT
சிக்கமகளூரு,

ஹரிகரா அருகே செங்கல்சூளையில் விளையாடி கொண்டிருந்தபோது லாரி மோதி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரை சேர்ந்தவர் மஞ்சப்பா. இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள்கள் சிந்து (வயது 5), ரஞ்சினி (2). மஞ்சப்பாவும், லட்சுமியும் தாவணகெரே மாவட்டம் ஹரிகரா தாலுகா புத்தூர் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அந்தப்பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மஞ்சப்பாவும், லட்சுமியும் செங்கல்சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சிந்துவும், ரஞ்சினியும் செங்கல்சூளை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், செங்கல் ஏற்றுவதற்காக லாரி ஒன்று செங்கல்சூளைக்கு வந்தது. அப்போது அந்த லாரி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரஞ்சினி மீது மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சினி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மஞ்சப்பாவும், லட்சுமியும் ஓடி வந்து தங்களின் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஹரிகரா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், குழந்தை ரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹரிகரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஹரிகரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ரமேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்