குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதால் அபராதம் விதிப்பு

போலீசார் கண்எதிரே தமிழக வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு.

Update: 2018-02-25 23:27 GMT
பெங்களூரு,

பெங்களூருவில், குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால், போலீசார் கண் எதிரே தமிழக வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு மைகோ லே-அவுட் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு பன்னரகட்டா ரோட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் வழிமறித்தனர். பின்னர் அவர் மதுஅருந்தி உள்ளாரா? என்று சோதனை நடத்தினார்கள். அவர் மதுஅருந்தி இருந்ததால் போலீசார் அபராதம் விதித்தார்கள். ஆனால் அவர் மதுஅருந்தவில்லை என்று போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசாருக்கும், வாலிபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

பின்னர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு வாலிபர் சென்றுவிட்டார். இதனால் அந்த மோட்டார் சைக்கிளை மைகோ லே-அவுட் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்து வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு வந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை கொடுக்கும்படி போலீசாரிடம் கேட்டார். உடனே அபராதம் கட்டும்படியும், மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்களை கொடுக்கும்படியும் வாலிபரிடம் போலீசார் கேட்டார்கள். ஆனால் அவர் தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிளை கொடுக்க போலீசார் மறுத்து விட்டனர்.

இந்த நிலையில், போலீஸ் நிலையம் முன்பாக திடீரென்று அந்த வாலிபர் தான் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு, போலீசார் கண்எதிரேயே தீவைத்து கொண்டார். இதனால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் வாலிபரின் உடலில் பிடித்த தீயை போலீசார் அணைத்தார்கள். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய வாலிபரை விக்டோரியா ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் சி.கே.அச்சுக்கட்டுவை சேர்ந்த மணி (வயது 30) என்பதும், லாரி டிரைவரான அவரது சொந்த ஊர் தமிழ்நாடு என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, போலீஸ் கமிஷனர் சுனில்குமார், போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்